பாராளுமன்ற உறுப்பினர்கள் கொந்துராத்துக்காரர்களாகவும், தரகர்களாகவும் மாறியுள்ளனர் : ரிஷாத் பதியுதீனின் கைதால் சாதாரண மக்கள்கூட விளங்கிக் கொள்ளுமளவிற்கு நாட்டின் அரசியல் - நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொந்துராத்துக்காரர்களாகவும், தரகர்களாகவும் மாறியுள்ளனர் : ரிஷாத் பதியுதீனின் கைதால் சாதாரண மக்கள்கூட விளங்கிக் கொள்ளுமளவிற்கு நாட்டின் அரசியல் - நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட், கொங்கிறீட் வீதிகளைப் பெற்றுக் கொண்டு கொந்துராத்துக்காரர்களாக, தரகர்களாக மாறியுள்ளனர். எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவரல்லர். எப்போதும் மக்களுக்காகவே குரல் கொடுப்பவர் என நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04வது சபையின் 37வது மாதாந்த பொதுச்சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை (29) மாலை நிறைவடைந்த பின்னர் இரவு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் தற்போது பேசுபொருளாக இருக்கின்ற விடயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனின் கைதாகும். இவ்விடயத்தில் பல்வேறு விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. 

குறிப்பாக, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இந்த நாட்டில் பல காலமாக அமைச்சராக இருந்து மக்களுக்கு பணியாற்றிய ஒருவர். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கின்றார்.

குற்றவாளி என்ற தீர்ப்பை சட்டம் வழங்காத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இவருடைய அமைச்சின் கீழிருக்கின்ற நிறுவனத்தில் அதற்குரிய பொருட்களை குண்டுதாரிகள் கொள்வனவு செய்தார்கள் என்ற அடிப்படையில் அந்த நேரம் அமைச்சராக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு நீதிமன்றத்தின் ஆணையுடன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. அவ்வாறியில்லாமல், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரிக்க புனித நோன்பு தினத்தில் நள்ளிரவில் சென்று அத்துமீறி அவரது வீட்டுக் கதவுகளை உடைத்து கைது செய்து தற்போது சிறை வைத்துள்ளார்கள். 

இக்கைது நடவடிக்கையை சாதாரண மக்கள்கூட விளங்கிக் கொள்ளுமளவிற்கு இந்நாட்டின் அரசியல் நிலை சென்று கொண்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் தமிழ், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் கைது நடவடிக்கையை ஆட்சேபித்துப் பேசியுள்ளார்கள். சிறுபான்மை முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்களும் குறிப்பாக, முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் உரையாற்றியுள்ளார்.

இஸ்லாமிய பெயர் தாங்கிய வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு சிலரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காக முஸ்லீம்களாகிய நாங்களே அவர்களைக் காட்டிக் கொடுத்திருந்தோம். 

இதேபோன்று சாய்ந்தமருது மக்கள்கூட அக்குழுவினரை அடையாளங்கண்டு இராணுவம் பொலிஸாரிடம் பிடித்து கொடுத்திருந்தார்கள். நிந்தவூர் பகுதியிலும் அவர்கள் இருந்ததாக அடையாளப்படுத்தபட்ட இடங்களை பள்ளிவாசல்களுடன் இணைந்து நாங்கள் காட்டிக் கொடுத்து அவர்களை முற்று முழுதாக அழித்தோம்.

இஸ்லாம் மார்க்கம் என்பது ஏனைய சமூகத்தினரை துன்புறுத்துவதோ மற்றுமொரு உயிரைப் பறிப்பதற்கோ போதிக்கின்ற மார்க்கமல்ல. சாந்தி, சன்மார்க்கம் ஆகியவற்றைப் போதிக்கின்ற மார்க்கமாகும். நோன்பு காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றொம். எமது தலைவரை எமது மக்களுக்கு நன்கு தெரியும். ஏழை மக்களின் கண்ணீரை துடைத்தவர் அவர்.

எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக் கொண்டு கொந்துராத்துக்காரர்களாக, தரகர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் 20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, மக்களிடம் அரசினைச் சார்ந்து போவதனால்தான் எமது மக்களின் உரிமையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்குமென கூறியவர்கள். ஆனால், தற்போது நடந்ததென்ன அழிவுகள்தான் மிஞ்சியிருக்கின்றது.

சமூகத்திற்கெதிராக இடம்பெறுகின்ற அநியாயங்களைத்தட்டிக் கேட்பார்கள் எனக்கூறியே எமது மக்கள் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வாக்களித்திருந்தனர். ஆனால், அவர்கள் தற்போது மக்களுக்கெதிராகச் செயற்படுகின்றனர். எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவரல்லர். எப்போதும் மக்களுக்காகவே குரல் கொடுப்பவர் என தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து சமூகமளித்திருந்ததுடன், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment