சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காகச் சொல்கிறார் - கேள்வியெழுப்பினார் கஜேந்திரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காகச் சொல்கிறார் - கேள்வியெழுப்பினார் கஜேந்திரன் எம்.பி

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காகச் சொல்கிறார் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்புப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (3) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை கிட்டத்தட்ட பத்து பன்னிரெண்டு பொலீஸ் நிலையங்களில் பொலீசார் தடை செய்து நிறுத்துவதற்கு முற்பட்ட போதிலும்கூட, மக்கள் அதனைத்தாண்டி அந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடைய கோரிக்கை என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும். தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதாக தான் இருந்தது.

ஆனால், சுமந்திரனும் சாணக்கியனும் சேர்ந்து இந்தப் பேரணியை தாங்களே ஏற்பாடு செய்ததாக ஒரு தோற்றப்பாட்டை உலகளவில் ஏற்படுத்தி விட்டு, இறுதியாக இலங்கையிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்து தாங்கள் இந்தப் பேரணிக்கு உரிமை கோரி முடித்து வைத்தார்கள்.

அத்துடன், அறுதிப் பெரும்பான்மை பெற்ற தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே தாங்கள் இப்பேரணியை ஏற்பாடு செய்ததால் அந்தப் பேரணியின் போது இலங்கை அரசிடம் நீதி கேட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு சுமந்திரன் என்பவர் ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காகச் சொல்கிறார் என்று கேட்க விரும்புகின்றேன். இதனை வன்மையாகச் கண்டிப்பதுடன், இவர்களது அயோக்கியத்தனங்களை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment