முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை - அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை - அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் அறிவிப்பு

உலக அளவில் இந்த கொடிய வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பொது வெளியில் இனி முகக் கவசம் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளில் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 

உலக அளவில் இந்த கொடிய வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

அதேசமயம் அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் இதுவரை 14 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் ஒன்பதரை கோடி பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் ஆவர். இதன் பலனாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட நபர்கள், அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் இனி பொதுவெளியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) அறிவித்துள்ளது.

இது குறித்து சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கொரோனா தொற்று வெளியில் நிகழலாம் என்றாலும் பரவும் அபாயம் மிக குறைவு என்று சான்றுகள் கூறுகின்றன. 

ஆரம்ப கால ஆய்வுகள் முழு தடுப்பூசி போட்டவர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. 

எனவே முழு தடுப்பூசி போட்டவர்கள் இனி பொது வெளியிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கூட்டங்களிலும் முகக் கவசம் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

சிடிசியின் இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் பெரிதும் வரவேற்றுள்ளார். மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இது ஒரு அசாதாரண முன்னேற்றம் என அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘மற்றவர்களிடமிருந்து வைரஸ் பெறுவது அல்லது மற்றவர்களுக்கு வைரசை கொடுப்பது மிக மிகக் குறைவு என்கிற தரவுகளை நமது விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதன் வெளிப்பாடே முழு தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என்கிற அறிவிப்பாகும். 

தடுப்பூசி போட்டுக் கொண்டால் நீங்கள் இன்னும் பலவற்றை செய்யலாம். எனவே இதுவரை தடுப்பூசி பெறாத நபர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இது ஒரு தேசபக்தி செயலாகும். 

தடுப்பூசி உங்கள் உயிரை காப்பாற்றுவதோடு உங்களை சுற்றி உள்ள மக்களின் உயிரையும் காப்பாற்றுவதாகும். மேலும் அவை இயல்பான வாழ்க்கைக்கு நெருக்கமாக வர நமக்கு உதவுகின்றன’’ என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad