ஜனாதிபதி கோத்தாபய கீழ்த்தரமான முறையில் உரையாடினார், அவருக்கு போதிய அரசியல் தெளிவில்லை என்பதை நான் அறிவேன் - அவரின் அச்சுறுத்தலினால் என்னுடைய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

ஜனாதிபதி கோத்தாபய கீழ்த்தரமான முறையில் உரையாடினார், அவருக்கு போதிய அரசியல் தெளிவில்லை என்பதை நான் அறிவேன் - அவரின் அச்சுறுத்தலினால் என்னுடைய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்ததால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கீழ்த்தரமான முறையில் என்னிடம் தொலைபேசியில் உரையாடினார். நாட்டு தலைவரின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனாதிபதியின் அச்சுறுத்தலினால் என்னுடைய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளேன் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்க்ணடவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு ஊழல் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியமையின் காரணமாக கடந்த காலங்களிலிருந்தே நான் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றேன்.

கடந்த காலத்தில் கோப் குழுவின் தலைவரென்ற அடிப்படையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் வெளிப்படுத்தியபோது அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்ட பி.பி.ஜயசுந்தரதான் தற்போது ஜனாதிபதியின் செயலாளராகப் பதவி வகிக்கின்றார்.

அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராகப் பெயரிடப்பட்ட மற்றொருவரான மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவற்றிலிருந்து ஊழல் மோசடிக்காரர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் பதவிகளை வழங்குகின்றது என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதியை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கு நாம் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். இந்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்போம் என்றே நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களிடம் கூறினோம்.

அதேபோன்று வெளிநாடுகளிடம் கையளிக்கப்பட்டிருக்கும் வளங்களை மீளப் பெறுவதாகவும் கூறினோம். மோசடிக்காரர்களை அரசாங்கத்திற்குள் அனுமதிக்கமாட்டோம். சட்டத்தின் பிரகாரம் அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கித்தருவோம் என்றும் கூறினோம்.

எனினும் கடந்த காலத்தில் சீனி வரி மோசடி இடம்பெற்றது. அதேபோன்று புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கூறுகள் அடங்கிய எண்ணெய்யை எமது நாட்டில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது நான் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் பேசுகின்றேன். அது குறித்து இரகசியமாக சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அது பற்றி எமக்கோ அல்லது ஆளுந்தரப்பிலுள்ள கட்சிகளுக்கோ தெளிவுபடுத்தப்படவில்லை. 

ஆகவே இதன் பாரதூரத்தன்மை தொடர்பில் நேற்று முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சில விடயங்களை வெளியிட்டிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அவர் நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் அதற்கேற்றவாறு பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவருக்கு போதிய அரசியல் தெளிவு இல்லை என்பதை நான் அறிவேன்.

எனவே அது குறித்து காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வை எட்டக்கூடிய வழிமுறைகளை ஆராயும் தொலைபேசி கலந்துரையாடலாகவே அமையும் என்று எதிர்பார்த்தேன்.

எனினும் அவர் ஒரு நாட்டின் தலைவருக்கு சற்றும் பொருத்தமற்ற மொழி நடையில் மிகவும் ஆவேசத்துடனும் வெறுப்புடனும் என்னிடம் பேசினார். அதனால் எனக்கு விருப்பமில்லாத போதிலும் அவர் என்னிடம் பேசியது போன்றே அவருக்குப் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. இது மிகவும் மோசமான விடயமாகும்.

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே நோக்கமாகும். ஆனால் அதனையே தவறாகக் கருதுகின்ற ஒரு தலைவருக்கு கீழே நாம் எவ்வாறு நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியும்?

அதுமாத்திரமன்றி அவர் சில விடயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசினார். நான் பசில் ராஜபக்ஷ தொடர்பில் பேசினேன். ஆனால் இன்று நேற்று அல்ல. எப்போதும் அவர் ஒரு ஊழல்வாதி என்றே நான் வெளிப்படையாகக் கூறி வருகின்றேன்.

அவரது பிள்ளைகளை நான் எதிலும் தொடர்புபடுத்தவில்லை. இந்த துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் வாழ்வதற்கு நாடு ஒன்று இல்லாமல்போகும் என்றே நான் குறிப்பிட்டேன்.

எனினும் அதனை ஒரு தவறாகக்கருதி மிகவும் மோசமான வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

ஜனாதிபதியொருவர் எம்மை அவ்வாறு அச்சுறுத்தும் போது எமக்கும் உயிரச்சம் ஏற்படுகின்றது. அதேபோன்று பொலிஸ்மா அதிபருக்கும் இதுபற்றி அறிவித்துடன் எழுத்து மூலமும் இவ்விடயங்களைக் கையளிக்கவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment