யாழ். மாவட்டத்தை விவசாயத்தில் தன்னிறைவு மாவட்டமாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் திட்டங்கள் தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் உற்பத்திகள் அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் பயனாாக இவ்வருடம் 2021 யாழ் மாவட்டத்தில் செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், உழுந்து, பயறு, கௌபி, குரக்கன், உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களின் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
செத்தல் மிளகாய் உற்பத்தி, பெரிய வெங்காய செய்கை, சின்ன வெங்காய பயிர்ச் செய்கை, உழுந்து பயிர்ச் செய்கை, பயறு பயிர்ச் செய்கை, கௌபி பயிர்ச் செய்கை, குரக்கன் செய்கை மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கை ஆகியன நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயிர்களுக்கான விவசாயிகளின் தேவைகளை கண்டறிவதற்காக வழங்கப்படவுள்ள மானியங்கள் தொடர்பான விவரம் கொண்ட விண்ணப்பங்கள் விவசாய போதனாசிரியர் அலுவலகத்தில் உள்ளது.
பொருத்தமான பயனாளிகள் விவசாய போதனாசிரியர் அலுவலகத்தில் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோப்பாய் நிருபர்
No comments:
Post a Comment