(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக கருதப்பட வாய்ப்புள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சித் தலைவர் புபுது ஜாகொட எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியினரினால் அமைதிவழி ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கறுப்புப் பண சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய வர்த்தகர்களின் தளமாக துறைமுக நகரம் மாற்றப்படும். இதனால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பொருளாதாரமாகவே கருதப்படும்.
இதேவேளை, இந்த துறைமுக நகர சட்ட மூலத்தின் ஊடாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் அதிகார போட்டி மேலும் உக்கிரமடைவதுடன், அதன் காரணமாக நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
மேலும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் நாட்டுக்குள் அதிகரிக்கும். இதனால் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு காணப்படும் உரிமைகள் இரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment