போதைப் பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் அழிவுகளைத் தடுக்க வேண்டுமாகில் ஒருங்கிணைந்த பல வழிகளைக் கையாள வேண்டும் - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

போதைப் பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் அழிவுகளைத் தடுக்க வேண்டுமாகில் ஒருங்கிணைந்த பல வழிகளைக் கையாள வேண்டும் - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

போதைப் பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் அழிவை நாம் தடுக்க வேண்டுமாகில் ஒருங்கிணைந்த பல வழிகளைக் கையாள வேண்டியிருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.

பிரதேசத்தில் காணப்படும் போதைப் பொருள் தாக்கம் சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் வியாழக்கிழமை 22.04.2021 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இது விடயமாக தொடர்ந்து தெரிவித்த அவர் போதைப் பொருள் ஆக்கிரமிப்பு என்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கே அழிவு தரும் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டுமென்றால் அடிப்படையில் மூன்று வழிகளைக் கையாள வேண்டும்.

முதலில் அதன் விநியோக வலைப்பின்னலை தகர்க்க வேண்டும். அடுத்து ஏற்கெனவே போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களை மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக உதவ வேண்டும். மூன்றாவதாக மேலும் புதிய போதைப் நுகர்வாளர்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த மூன்று ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களையும் ஏக காலத்தில் சமாந்தரமாகச் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் போதைப் பொருளின் தாக்கத்திலிருந்து மனித சமூகத்தை விடுவிக்க முடியும்.

போதைப் பொருள் தடுப்பு விடயத்தில் பிரதேச ரீதியாக சில கருமங்களை பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மேற்கொண்ட வண்ணமே உள்ளார்கள். ஆயினும் இந்தக் கருமங்கள் இன்னமும் காத்திரமான முறையில் செய்யப்படுதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியவசியமாகத் தேவைப்படுகின்றது.

போதைப் பொருள் விற்பனையாளர்களைத் தேடிப் பிடிப்பதில் பொலிஸார் தமது கடமைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்குரிய மருத்துவ உளநல உதவிகளை வழங்குவதில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மருத்துவ உதவிகளைப் பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்குக் கொண்டு சேர்ப்பிப்பதில் பல பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மருத்துவ உதவிகளை நாடுவதற்காக கொண்டு சேர்ப்பிப்பதை யார் செய்வது என்பதில் சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவால்கள் உள்ளன.

வைத்தியர்கள் வீடுவீடாகச் சென்று பரிசோதனை செய்து போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பிக்க முடியாது.

சுகாதாரத் துறையினருக்கு கிடைக்கப் பெறும் தகவல்களைக் கொண்டு வீடுகளிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டாலும் அவர்கள் தங்களுக்கான வைத்திய சேவைகளைப் பெறுவதை சம்பந்தப்பட்ட நபர்கள் விரும்ப மாட்டார்கள். சிலவேளை அந்த நபரது குடும்பமும் விரும்பாத நிலைமையும் உள்ளது.

இந்த விடயத்தில் பொதுமக்களும் சமூக அக்கறையுள்ளோரும் அதிகாரமுள்ள பொலிஸ் தரப்பும் உதவ வேண்டும். அவ்வாறு நடந்தால் அது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதில் வெற்றியாக அமையும்” என்றார்.

No comments:

Post a Comment