(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் புத்தசாசனம் பாதுகாப்பு மற்றும், புத்தமத வளர்ச்சி என்ற அரசியலமைப்பிலான ஏற்பாட்டுக்கு முரணானது துறைமுக நகருக்குள் இரு சட்டங்கள் செல்வாக்கு செலுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. புத்தசாசன கொள்கையினை பாதுகாக்க புத்தசாசன அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஓமல்பே சோபித தேரர் நேற்று திங்கட்கிழமை புத்தசாசன அமைச்சில் முறைப்பாடளித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டதாவது, பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது.
புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை போசிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பில் அரசியலமைப்பில் பல ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அந்த ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரத்திற்குள் இரு வேறுப்பட்ட சட்டங்கள் செல்வாக்கு செலுத்தும்.
ஒரு நாடு - ஒரு கொள்கை என்ற சட்டத்தை அமுல்படுத்தவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள பொதுச்சட்டத்துக்கு முரணாக செயற்படுகிறது.
நாட்டின் இறையாண்மையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கும் உண்டு.
அரசாங்கம் தவறான வழியில் செயற்படும் போது தவறை சுட்டிக்காட்டும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment