உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது - தொல்பொருள் ஆராய்ச்சிகள் தமிழர்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும் : எம்.ஏ. சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது - தொல்பொருள் ஆராய்ச்சிகள் தமிழர்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும் : எம்.ஏ. சுமந்திரன்

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோயில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழ் தரப்பையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கோயில் வளாகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உருத்திரபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மேட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொல்லியல் திணைக்களத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரமானது, தொன்மை வாய்ந்த புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது மட்டுமேயாகும். புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.

கடந்த தடவை குறித்த கோயிலுக்கு வந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் நடவடிக்கையைக் கைவிட்டுப் போயுள்ளார்கள்.

இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.

இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறான புராதனச் சின்னங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம்.

நாம் தொன்மை வாய்ந்த ஒரு இனம் என்ற நிலையில் எமது பிரதேசங்களில் நிச்சயமாக பல தொன்மை வாய்ந்த இடங்கள் இருக்கும். எனவே, அவை ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதன்போது, தமிழர்கள் எப்போதிருந்து இங்கே வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, அவ்வாறான ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் மாணவர்கள் எல்லோரையும் இணைத்து அந்த ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment