இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் - வேலுசாமி இராதாகிருஸ்ணன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் - வேலுசாமி இராதாகிருஸ்ணன்

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார் என்று அரசாங்கம் கூறினாலும், ஆளுங்கட்சிக்குள்ளேயே இதில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. எத்தகைய சிக்கல் காணப்பட்டாலும் இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சி என்ற ரீதியில் தொடர்ச்சியாக இதனை நாம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறுகின்ற போதிலும், அதனை எந்த முறைமையில் நடத்துவது என்பது அரசாங்கத்திற்கு பெறும் பிரச்சினையாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதியை நிறைவேற்றும் வகையிலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மாகாண சபை விவகாரத்தில் தீர்க்கமானதொரு முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் உண்மையில் தேர்தல் நடத்தப்படுமா என்று உறுதியாகக்கூற முடியாது.

மாகாண சபைத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா பல சந்தர்ப்பங்களில் அழுத்தம் பிரயோகித்துள்ளது. ஆனால் கொவிட் நிலைமையைக் காரணம் காட்டி எதையுமே செய்ய முடியாது என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட், எண்ணெய் இறக்குமதி, உரம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அரசாங்கத்தின் வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றமை யாரேனுமொருவரை திருப்திப்படுத்துவதற்கான செயற்பாடுகளா என்ற சந்தேகம் எழுகிறது.

பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படாமல் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை தவறு. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்படுவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது பிழையான முடிவாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமலிருக்க ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad