60 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

60 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கா தனது 60 மில்லியன் அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்துகளையும் அவை கிடைக்கப் பெற்ற உடன் ஏனைய நாடுகளுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றுக்கு பின்னர் எதிர்வரும் மாதங்களில் இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அது அந்த தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்துள்ளது.

வேறு நாடுகளில் அவசிய தேவை இருக்கும் நிலையில் அந்த நாடு தடுப்பு மருந்துகளை பதுக்குவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த அஸ்ட்ரா செெனகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருக்கும் மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு சுமார் நான்கு மில்லியன் டோஸ்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் உறுதி அளித்திருந்தார்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்திருப்பதும் அமெரிக்கா தனது சுகாதார வளங்களை பகிர்ந்து கொள்வதற்கு பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. 

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எதிர்வரும் மாதங்களில் தனது மீளாய்வை பூர்த்தி செய்த பின் 10 மில்லியன் அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்துகளை விடுவிக்க எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

மேலும் 50 மில்லியன் டோஸ்கள் உற்பத்தியின் பல கட்டங்களில் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் அதன் தரத்தை உணவு மருந்து நிர்வாகம் சோதிக்கும் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜேன் சக்கி தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கும் பைசர் பயோஎன்டெக், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன்ட் ஜோன்சர் ஆகிய கொவிட்-19 தடுப்பு மருந்துகள் அந்த நாடு முழுவதும் பயன்படுத்த போதுமாக இருப்பதால் அங்கு அஸ்ட்ரா செெனகா மருந்தின் தேவை ஏற்படாது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது வரை 53 வீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் ஒரு முறையேனும் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad