யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு - 40 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை பறிமுதல் - 20 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது! - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, April 18, 2021

demo-image

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு - 40 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை பறிமுதல் - 20 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது!

Three-arrested-in-connection-with-robberies-at-nine-schools-in-Jaffna-and-Kilinochchi-699x375
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஒன்பது பாடசாலைகளில் திருட்டுக்களில் ஈடுப்பட்டதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையின்போது, ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிக்கணினிகள் உள்ளிட்ட 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை, முழங்காவில் மற்றும் குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி.லியனகேயின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப் தலைமையிலான அணியினரே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம், மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள ஒன்பது பாடசாலைகளில் திருட்டில் ஈடுபட்டிருந்தனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே திருட்டச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இரவு வேளைகளில் கதவுகளை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களைத் திருடியுள்ளதுடன் திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம், செம்மணியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பதற்காக அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *