புத்தாண்டு கொத்தணி - இன்று 1636 பேருக்கு கொரோனா : பல பிரதேசங்கள் முடக்கம் : ஒரு வாரத்தில் நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

புத்தாண்டு கொத்தணி - இன்று 1636 பேருக்கு கொரோனா : பல பிரதேசங்கள் முடக்கம் : ஒரு வாரத்தில் நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு 'புத்தாண்டு கொத்தணி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மே மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அடுத்த இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட சகல மங்கள நிகழ்வுகளுக்கும் தடை விதித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாத்தளை, குருணாகல், மொனராகலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நாட்டில் இன்று மாலை வரை 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108120 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95975 பேர் குணமடைந்துள்ள போதிலும், 10764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
அத்தோடு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாத்தளை, குருணாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகளும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பொலிஸ் பிரிவுகளும் , குருணாகல் மாவட்டத்தில் பன்னல மற்றும் குருணாகல் பொலிஸ் பிரிவும், உடபதலாவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதே போன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் கல்முனை மற்றும் ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பொலன்னறுவை மாவட்டத்தில் எலஹெர மற்றும் சருபிம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவில் பொலுன்ன, இங்குருடலுவ, மிடலான, மொரபிட்டிய, பெலெந்த, ஹெடிகல்ல மற்றும் மொரப்பிட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், போதலவ, பஹல, ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த, பெலேவத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், தீனியாவெல கிராம உத்தியோகத்தர் பிரிவும், மீகஹாதென்ன பொலிஸ் பிரிவில் வல்லவிட்ட தெற்கு, மாகந்தவல, கட்டுயகெலே, வெல்மீகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை மாத்தளை, குருணாகல், மொனராகலை, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, காலி மற்றும் பொலன்னறுவை ஆகிய 8 மாவட்டங்களில் 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், 6 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே நாளில் கொழும்பில் மாத்திரம் 500 இற்கும் அதிக தொற்றாளர்கள்
நேற்று வியாழக்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட 1531 தொற்றாளர்களில் 533 தொற்றாளர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 146 தொற்றாளர்களும் கொழும்பில் ஏனைய பகுதிகளில் 387 தொற்றாளர்களும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்தில் 7000 தொற்றாளர்கள்
இம்மாதம் 23 ஆம் திகதி முதல் கொவிட் பரவல் 3 ஆம் அலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து நேற்று வரை நாடளாவிய ரீதியில் 7764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி 969, 24 ஆம் திகதி 895, 25 ஆம் திகதி 793, 26 ஆம் திகதி 997, 27 ஆம் திகதி 1111, 28 ஆம் திகதி 1466 மற்றும் 29 ஆம் திகதி 1533 என கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு 7000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் 6 மரணங்கள்
கொவிட் தொற்றால் மேலும் 6 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்னொருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண்னொருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்னொருவரும், வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆனொருவரும், நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்னொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment