நிர்வாண படப்பிடிப்பு : 12 உக்ரைனிய பெண்களை நாடு கடத்தியது துபாய் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

நிர்வாண படப்பிடிப்பு : 12 உக்ரைனிய பெண்களை நாடு கடத்தியது துபாய்

துபாயில் நிர்வாண படப்பிடிப்பில் ஈடுபட்ட 12 உக்ரைனிய பெண்களை அவர்களின் தாயகத்துக்கு நாடு கடத்தியிருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு.

துபாயின் மெரினா பகுதியில் நிர்வாண ஷூட்டிங்கில் ஈடுபட்ட இந்த பெண்கள், தங்களின் படப்பிடிப்பு காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிறகு அவை வைரலாகின. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் 12 பேரையும் தங்களின் கட்டுப்பாட்டில் விசாரித்தது துபாய் காவல்துறை.

பொது இடத்தில் ஆபாச செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. துபாயில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்களுக்கு உள்ளூர் பண மதிப்பில் ஐந்தாயிரம் திர்ஹமுக்கு அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

உலக அளவில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை வரவேற்கும் வகையில் சிறந்த விருந்தோம்பல் அனுபவத்தை தருகிறது துபாய் அரசு. ஆனால், அதே சமயம் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பாதுகாக்க அங்கு கடுமையான விதிகள் அமுலில் உள்ளன.

அதன்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிமக்கள் இல்லையென்றாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டின் சட்டம் வழிவகுக்கிறது.

சர்ச்சைக்குள்ளான அந்த சம்பவத்தில் 12 பெண்களும் ஒரு ஒளிப்பதிவாளரும் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவர்களின் செயல், துபாயின் மதிப்பு மற்றும் பாரம்பரியத்துக்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக துபாயில் உள்ள உக்ரைனிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 12 பெண்களிடமும் பேசியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அந்த 12 பெண்களும் நாடு கடத்தப்பட்ட தகவலை துபாய் ஊடகத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இது முதல் சம்பவம் அல்ல
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சட்டங்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்துவது, ஓரினச் சேர்க்கை உறவுகள் போன்ற செயல்பாடுகளுக்காக சிலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துபாய் காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. பொது அமைதிக்கு அத்தகைய செயல்பாடுகள் பாதகமாகலாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் காவல்துறை கூறியது.

கடந்த காலங்களில், துபாயில் விடுமுறைக்காக வந்த சுற்றுலா பயணிகள் சிலரின் சர்ச்சை செயல்பாடுகள் காரணமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். அதில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த பெண், உள்ளூர் ஆடவருடன் விருப்ப உறவை வைத்துக் கொண்ட போதும் அவருக்கு துபாய் அரசு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

No comments:

Post a Comment