127 கிலோ கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன், பெண்கள் இருவர் உட்பட 12 சந்தேக நபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

127 கிலோ கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன், பெண்கள் இருவர் உட்பட 12 சந்தேக நபர்கள் கைது

(செ.தேன்மொழி)

போதைப் பொருளுடன் தொடர்புபட்டு வத்தளையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 127 கிலோ கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன், பெண்கள் இருவர் உட்பட 12 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வத்தளை பகுதியில் கடந்த 10 ஆம் திகதி ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 113 கிராம் ஐஸ், 101 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

சந்தேக நபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் படி விசாரணைகளை முன்னெடுத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மறுநாள் 11 ஆம் திகதி ஜா-எல - நிவங்கம பகுதியில் 15 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளுக்கமைய, கடந்த திங்கட்கிழமை சப்புகஸ்கந்த - ரத்காவத்த பகுதியில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடமிருந்து 110 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் கிடைக்கப் பெற்று வரும் தகவல்களுக்கமைய நேற்று முன்தினம் வியாழக்கிழமை வத்தளை - ஹூணுபிட்டி பகுதியில் இரண்டு கிலோ 433 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 127 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்புகளை வழங்க முடியும். போதைப் பொருள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை 1997 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு தெரிவிக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment