பயணப் பொதியில் பெண்ணின் முண்டம் : நேற்றைய சுற்றிவளைப்பில் தப்பிச் சென்றிருந்த பொலிஸ் SI தற்கொலை - பெண்ணுடன் தங்குமிடம் சென்றவர் பயணப் பொதியுடன் திரும்பியுள்ளார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

பயணப் பொதியில் பெண்ணின் முண்டம் : நேற்றைய சுற்றிவளைப்பில் தப்பிச் சென்றிருந்த பொலிஸ் SI தற்கொலை - பெண்ணுடன் தங்குமிடம் சென்றவர் பயணப் பொதியுடன் திரும்பியுள்ளார்

கடந்த திங்கட்கிழமை (01) டாம் வீதியில், தலையில்லாத பெண்ணின் முண்டம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான புத்தள பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை உறுதிப்படுத்தினார்.

சந்தேகநபர் இன்று (03) பதல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலத்திற்கு அருகில் விஷ போத்தலொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்

டாம் வீதி பகுதியில் கைவிடப்பட்ட பயணப் பொதியொன்றில், மீட்கப்பட்ட தலையில்லாத சடலம், குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெப்பனாவா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான, திருமணமாகாத பெண்ணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணையில் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபராக, புத்தள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 52 வயதான, விடுமுறையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பதல்கும்புர பகுதியில் வசிக்கும், சந்தேக நபரை கைது செய்ய மொணராகலை பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று அவரது வீட்டிற்கு நேற்று சென்றிருந்தபோது சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேகநபர், குறித்த பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இரவு ஹங்வெல்ல பஸ் தரிப்பிடம் அருகே உள்ள விடுதியொன்றுக்கு, ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளதோடு, கடந்த திங்கட்கிழமை (01) இரவு 11.00 மணியளவில் குறித்த பெண் இன்றி தனியாக புறப்பட்டதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் அடிப்படையில், குறித்த இருவர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் மற்றும் இறந்தவர் தொடர்பில் அடையாளத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

கடந்த மார்ச் 01ஆம் திகதி, கொழும்பின் டாம் வீதி பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியொன்றில், பெண் ஒருவரின் சடலம் குறித்து CCTV காட்சிகளின் உதவியுடன் பொலிசார் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதற்கமைய, குறித்த பயணப்பொதியுடன் ஹங்வெல்ல - கொழும்பு (143) தனியார் பஸ் ஒன்றில் ஏறிய நபர் ஒருவரே குறித்த பயணப் பொதியுடன் கொழும்புக்கு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூல பெற்றதோடு, பஸ்ஸை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment