சீனி இறக்குமதியில் பாரிய மோசடி : பொதுமக்களுக்கு உரிய சலுகை சென்றடையவில்லை - உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது ஜே.வி.பி. - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

சீனி இறக்குமதியில் பாரிய மோசடி : பொதுமக்களுக்கு உரிய சலுகை சென்றடையவில்லை - உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது ஜே.வி.பி.

சீனி இறக்குமதி செய்யப்பட்டதில் அரசாங்கத்திற்கு ரூபா. 15.9 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில் பாரிய அளவிலான சீனி இறக்கமதி செய்யப்பட்டதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில் மக்களுக்கு உரிய சலுகை சென்றடையவில்லை எனவும் இதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சும் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, வரி குறைப்புக்கான காரணம் அரசாங்கத்திற்கு சார்பான வர்த்தகர்கள் குழுவினருக்கு நிவாரணம் வழங்குவதாகும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட ரூபா. 15.9 பில்லியன் இழப்பை மீளச் செலுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு, மனுதாரரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கோரியுள்ளதோடு குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.

அத்துடன் குறித்த மனித உரிமை மீறல் தொடர்பில் இழப்பீடாக ரூபா. 500 மில்லியனை (ரூபா. 50 கோடியை) செலுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும் அம்மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, பாவனையாளர்கள் அலுவல் விவகார அதிகாரசபையின் தலைவர், சீனி இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment