போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம்

(செ.தேன்மொழி)

போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு, திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரும் இது தொடர்பான சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய நேற்றையதினம் மாத்திரம் நூற்றுக்கனக்கான சுற்றிவளைப்புகள் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

போதைப் பொருள் பாவனையின் காரணமாக இளைஞர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில், அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இத்தகைய சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தே அதிகளவான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைகின்றன. இந்நிலையில் இவ்வாறு தகவல்களை வழங்கும் நபர்களுக்காக பெறுமதிமிக்க பரிசில்களை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானத்துள்ளது.

அதற்கமைய போதைப் பொருள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அதனை 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி அழைப்புகளுக்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்க முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் தகவல்களில், முக்கியமான மற்றும் பாரிய சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அவர்களது சேவையை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் இத்தகைய தகவல்களை வழங்குவதற்காக ஊக்குவிக்கும் வகையிலும் பெறுமதி மிக்க பாராட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad