ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியாமற்போயுள்ளது - அமைச்சர் தினேஷ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியாமற்போயுள்ளது - அமைச்சர் தினேஷ் குணவர்தன

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எனவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் உள்ளகப் பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று செவ்வாய்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகத் தெரிவானார்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே எமது நாடு மிக மோசமான பாதையில் பயணிப்பதற்குக் காரணமாக அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தோம்.

உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலினால் பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான உதவிகளே வழங்கப்பட வேண்டும். மாறாக ஒவ்வொரு நாடுகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த வகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்குமாறு நாம் ஏனைய நாடுகளை வலியுறுத்தியிருந்தோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தமட்டில், அது அதன் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட முடியாது. குறிப்பாக ஒவ்வொரு நாடுகளையும் மையப்படுத்திய தனித்த தீர்மானங்களை முன்வைத்து, அவற்றை நிறைவேற்ற முடியாது. எனினும் அதற்கு முரணாகவே பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை முன்வைத்தன.

இருப்பினும் அதன் மீதான வாக்கெடுப்பின் போது அந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆகவே மொத்தமாக 47 உறுப்பு நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருப்பதுடன் ஏனைய 25 நாடுகள் அதனை நிராகரித்திருக்கின்றன.

இந்நிலையில் ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

அதேவேளை ஏற்கனவே கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கென உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசேட ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருக்கிறார்.

அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இது விடயத்தில் நாட்டின் சுயாதீனத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப் பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதேவேளை எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கின்றது. முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் அவ்வமைப்பினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் நாம் போரை முடிவிற்குக் கொண்டுவந்து, அனைத்து இன மக்களும் அமைதியாக வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

வெளிநாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்குப் பெரிதும் விரும்புகின்றார்கள். எனினும் எமக்கெதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கும் நாடுகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதேவேளை மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த அரசாங்கத்திலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மீண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment