ஆங் சான் சூச்சியின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மியன்மாரில் மேலும் அதிகரித்துள்ள பதற்றம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

ஆங் சான் சூச்சியின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மியன்மாரில் மேலும் அதிகரித்துள்ள பதற்றம்

மியன்மாரில் பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சியின் தலைவியான ஆங் சான் சூச்சியின் கட்சித் தலைமையகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் யங்கூனில் உள்ள தேசிய லீக் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிய அளவில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

அலுவலகத்தின் அருகே இருந்தவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்ததால் அதிகாலை 5 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

தீயில் அலுவலகத்தின் முகப்பு எரிந்து சேதமுற்றதாகக் கூறப்பட்டது. கட்சி உறுப்பினர்கள் சேதத்தின் கடுமையை ஆராய்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் மியன்மாரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மியன்மாரில், கடந்த மாதம் முதலாம் திகதி இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

போராட்டத்தில் சுமார் 320 பேர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னாள் அரசாங்க ஆலோசகரான சூச்சி அந்நாட்டு இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் நிலவரம் குறித்து உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad