2ஆவது பிணை முறி மோசடி வழக்கிலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

2ஆவது பிணை முறி மோசடி வழக்கிலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு, கடந்த 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற, மத்திய வங்கி பிணை முறி வழங்கலில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (01) விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் இத்தீர்ப்பை அறிவித்தது.

அதற்கமைய, குறித்த 7 பேரையும், தலா ரூபா. 10 இலட்சம் கொண்ட ரொக்கம் மற்றும் ரூபா 100 இலட்சம் (ரூ. ஒரு கோடி) கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அதன் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 7 பேரும் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2016 மார்ச் 29 மற்றும் 31இல் இடம்பெற்ற இரு பிணை முறி வழங்கல்களிலும் இடம்பெற்ற முறைகேட்டின் மூலம், ரூ. 36. 89 பில்லியன் (ரூபா 3,689 கோடி) அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த இரு முறி வழங்கல்கள் தொடர்பிலும் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்ய  கடந்த பெப்ரவரி மாதம், மூவரடங்கிய இரு விசேட மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் அர்ஜுன் மஹேந்திரன் ஆகிய 8 பேர் இவ்விரு வழக்குகளின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பிணை முறி வழங்கல் முறைகேடு தொடர்பிலும் வெவ்வேறு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற இரண்டாவது பிணை முறி வழங்கலில் முறைகேடாக பயன்படுத்திய ரூபா. 1.5 பில்லியன் (ரூ. 150 கோடி) தொடர்பான வழக்கில், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களுக்கும் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment