அரசின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இனவாத, மதவாத, இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளே ஜெனிவா தோல்விக்கு காரணம் - சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

அரசின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இனவாத, மதவாத, இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளே ஜெனிவா தோல்விக்கு காரணம் - சஜித் பிரேமதாச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜெனிவா பிரேரணையில் எமக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் இம்முறை ஆதரவளிக்காமல் இருந்தமைக்கு, அரசாங்கத்தின் மோசமான வெளிநாட்டு கொள்கையே காரணமாகும். மனித உரிமை மீறல் தொடர்பாக எல்.எல்.ஆர்.சி, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி இருந்தால் ஜெனிவாவில் இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்காது. அத்துடன் 13ஆம் திருத்ததில் தெரிவிக்கப்பட்டடுள்ளதன் பிரகாரம் மாகாண சபை முறை அவ்வாறே நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜெனிவாவில் இந்த நிலை ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணம். ஆணைக்குழுவின் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டிருக்கும் 17 பக்கம் கொண்ட அறிக்கையில் வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பாக சுமார் 3 பக்கங்களிலே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

80 வீதம் எமது நாட்டில் இடம்பெறும் ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அரச நிறுவனங்கள் அரசியலாக்கப்பட்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே தெரிவிக்கபட்டுள்ளன.

மேலும் கடந்த காலங்களில் ஜெனிவாவில் எமக்கு ஆதரவளித்த பல நாடுகள் இம்முறை எதிராக அல்லது வாக்களிப்பதை தவிர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் அரசாங்கத்தின் மோசமான வெளிநாட்டுக் கொள்கையாகும். 

அதேபோன்று அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நாட்டுக்குள் இடம்பெற்று வந்த இனவாத, மதவாத, இன நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் இடம்பெற்றமையே ஜெனிவாவில் தோல்வியடைய காரணமாகும்.

அத்துடன் அரசாங்கத்தின் இயலாமையை எதிர்க்கட்சி மீது சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றது.

எமது வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்குள் சிங்கள பெளத்த நாடு, 13ஆம் திருத்தத்தை இல்லாமலாக்குவோம். மாகாண சபையை இல்லாமலாக்குவோம் என பிரசாரம் செய்கின்றார். ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று பல்லின நாடு ,13 பிளஸ், மாகாண சபை முறைமையை மேற்கொள்வோம் என தெரிவிக்கின்றார். இவ்வாறான இரட்டை வேட வேசமே எமது நாட்டின் நம்பிக்கையை சர்வதேசத்திடம் இல்லாமல்போயுள்ளது.

மேலும் யுத்தத்துக்கு பின்னர் எமது உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயமாக்கியது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வாகும். பான்கீமூனுடன் மேற்கொண்ட இரு தரப்பு ஒப்பந்தத்தில், எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்து, எல்,எல்.ஆர்.சி. ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியது. அதனால்தான் சர்வதேசம் எமது விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தது. அரசாங்கத்தின் பலவீனங்கள் காரணமாகவே வெளிநாட்டு தலையீடுகள் வருகின்றன.

அதனால் எமது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். சர்வதே தலையீடுகள் எமக்கு தேவையில்லை. அந்த நிலைப்பாட்டிலேயே நாங்களும் இருக்கின்றோம். ஆனாலு எமது பிரச்சினை தீர்ப்பதற்கு நாங்கள் அமைக்கும் பொறிமுறை சர்வதே நாடுகளின் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபை முறை அவ்வாறே செயற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad