பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பில் பாரிய சத்தியாக்கிரக போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பில் பாரிய சத்தியாக்கிரக போராட்டம்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபலசேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுபலசேனா அமைப்பினரும்,பௌத்த பிக்குகள் சங்கத்தினரும் ஒன்றினைந்து சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் கொள்கைத் திட்டங்களை மார்ச் 11 என பெயர் குறிப்பிட்டு அரசாங்கத்திடம் கையளித்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பட்ட காலகட்டத்தில் இராணுவத்தின் உளவாளிகளாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு யார் ஆயுதம், நிதியுதவி வழங்கியது, வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையாயின் அந்த ஆயுதங்களுக்கு என்னவாயிற்று.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் நோக்கங்களை விடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதின், அனாஸ் நசீர், முஜிபூர் ரஹ்மான், தேசிய சுரா கவுன்சிலின் தலைவர் தாரிக் மொஹமட், இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.எம் அலிம், ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, முன்னாள் ஆளுரநர் ஹிஸ்புல்லா, ஆகியோருக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கட்டுவாப்பிடிய தேவஸ்தானத்தின் குண்டுதாரியின் மனைவியான சாரா உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் முறையான விசாரணை எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கான விசாரணை விசேட மேல் நீதிமன்றம் ஊடாக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யவும், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை முன்னெடுக்க தயாரான காரணிகளை பயங்கரவாதி சஹ்ரான் குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காரணிளாவன, அல்லாஹ் கடவுளுக்கான கடமைகளில் ஒன்றாக, கடவுளால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இராஜ்ஜியத்தில் சிரியாவில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டைக்கு பழிவாங்கும் வகையில், நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் முஸ்லிம் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கும் இலங்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இனம், மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் செயற்படுகின்றமையினால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. ஆகவே இவ்வாறான அரசியல் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

ஆகவே மேற்குறிப்படப்பட்டுள்ள அனைத்து யோசனை குறித்தும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment