கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட போட்டியில் காத்தான்குடி நகர சபை தெரிவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட போட்டியில் காத்தான்குடி நகர சபை தெரிவு

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

உள்ளூராட்சி முறையை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் அபிவிருத்தி பங்காளர்களைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியில், காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் செயற் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெருந்திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் காத்தான்குடியில் அண்மையில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட உயரதிகாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், நகரசபை செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக இந்நிகழ்வின் போது விளக்கமளிக்கப்பட்டதோடு, எதிர்கால வேலைத்திட்டம் தெடர்பாகவும் ஆராயப்பட்டது.

பசுமை நகரக் கோட்பாடு என்பது பிரதானமாக 4 விடயங்களை உள்ளடக்குகின்றது. 

செயற்திறன் மிக்க எரிசக்தி சார்ந்த பாவனை, சேவை வழங்கள் மற்றும் செயற்பாடுகள் சார்ந்த விடயங்களினாலான பசுமை பொருளாதாரம், பௌதிக அம்சம் தொடர்பான திட்டமிடல் என்பன மேற்படி விடயப்பரப்புகளாகும். 

இத்திட்டமானது ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகிய நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் முதலாம் கட்டம் 4 வருடங்களாகும்.

மேற்படி வேலைத்திட்டம் இலங்கையின் 4 மாகாணங்களில் போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 4 உள்ளூராட்சி சபைகளுக்கே கிடைக்கப் பெற்றுள்ளது. 

அவற்றில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் காத்தான்குடி நகர சபை இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
(புதிய காத்தான்குடி நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad