தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு, ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல - இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு கௌரவமான வரலாறு இருக்கின்றது : காத்தான்குடியில் தம்மதிலக தேரோ - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு, ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல - இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு கௌரவமான வரலாறு இருக்கின்றது : காத்தான்குடியில் தம்மதிலக தேரோ

தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு, ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல. அதனை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என கடுவல, தொரந்தொட்ட இராஜ மகா விகாரையின் கறுவிலக் கொட்டு தம்மதிலக தேரோ தெரிவித்தார்.

காத்தான்குடிக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள புராதனச் சின்னங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் இந்த மூன்று பௌத்த தேரர்கள் காத்தான்குடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தனர்.

இதன்போது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகளையும் இவர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டிலுள்ள புராதனச் சின்னங்கள் தேசிய சொத்துக்களாகும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து இந்த புராதனச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும் என கறுவிலக் கொட்டு தம்மதிலக தேரோ தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தேசிய சொத்துக்களாக மதித்து நடக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.

இலங்கையில் முஸ்லிம்கள் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்த்தவர்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் கௌரவமான பெறுமதியான ஒரு வரலாறு இந்த நாட்டில் இருக்கின்றது. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட துரதிஸ்டவசமான ஒரு சில சம்பவங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்களை ஏனைய சமூகங்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுடன், சங்கடங்களையும் ஏற்படுத்துவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ்வதில்லை, ஒழுக்கமாக வாழ்வதில்லை, புராதனச் சின்னங்களை அழிக்கின்றார்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள் என்பன போன்ற கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த வகையில் தேசிய தொல்பொருள்களை புராதனச் சின்னங்களை பாதுகாப்பதற்கான கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் என்றார்.

இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad