கம்பனிகளின் மிரட்டல்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸ் அடிபணியாது - செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

கம்பனிகளின் மிரட்டல்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸ் அடிபணியாது - செந்தில் தொண்டமான்

கம்பனிகளின் மிரட்டல்களுக்கு இ.தொ.கா அடிபணியப் போவதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகளை வழங்க முடியாதென்று பெருந்தோட்டக் கம்பனிகள் வெளிப்படுத்தி வரும் கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்சார் உரிமைகளிலிருந்து விலகப் போவதாக, பெருந்தோட்டக் கம்பனிகள் வெளிப்படையாக அறிவித்து வருகின்றமையானது, கம்பனிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது என்றும், செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “சம்பள நிர்ணய சபையில், ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட பின்னர், குறைவான நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்று அறிவித்து வந்த பெருந்தோட்டக் கம்பனிகள், தற்போது தொழிலாளர்களின் நலன்சார் உரிமைகளிலிருந்து விலகப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. 

கம்பனிகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு, இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸ் போன்ற மாபெரும் பிரதான தொழிற்சங்கமொன்று ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அவ்வாறான அச்சுறுத்தல்களை, 7, 8 பேரைக் கொண்டு தொழிற்சங்கம் நடத்தி வருபவர்களிடம் வைத்துக் கொள்ளுமாறும்” அவர் எச்சரித்துள்ளார்.

“ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்திலும் சரி, தொழிலாளர்களின் வேலை நாட்கள் உட்பட அவர்களின் தொழில்சார் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் சரி, முன் வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை.

“வேலை நாட்களைக் குறைத்து தொழிலாளர்களின் வயிற்றிலடிக்க முயன்றால், அவ்வாறு வழங்கப்படும் வேலை நாட்களில், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு கொழுந்தின் அளவைக் குறைத்து பதிலடி கொடுக்கவும் எமக்குத் தெரியும். 

ஒரு நாளில், 8 மணித்தியாலங்கள் வேலை செய்து, ஒரு கிலோ கிராம் தேயிலைக் கொழுந்தைப் பறிக்கச் செய்து, முழு நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்த வரலாறு கூட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இருக்கிறது. 

அதனால், தேவையற்ற விதத்தில் அச்சுறுத்தல்களை விடுத்து, தமக்குப் பாதகமாக நிலைமையை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் பெருந்தோட்டக் கம்பனிகள் செல்லாது என நான் நம்புகிறேன். அதையும் மீறிச் செயற்பட்டால், எங்களுடைய பதிலடி, கம்பனிகளுக்குப் பாதகமாகவே அமையும். 

இதனால், தொழிலாளர்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே பழிவாங்கும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad