பெண் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - செங்கொடி பெண்கள் இயக்க செயற்பாட்டாளர் ஆனந்தி சிவசுப்ரமணியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

பெண் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - செங்கொடி பெண்கள் இயக்க செயற்பாட்டாளர் ஆனந்தி சிவசுப்ரமணியம்

தேயிலை, இறப்பர் மலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு நீர் வசதியுடன் கூடிய ஒய்வு அறை, மலசலகூடம் என்பன அமைக்கப்படுவது அடிப்படை உரிமையாகும் என செங்கொடி பெண்கள் இயக்க செயற்பாட்டளர் ஆனந்தி சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு செங்கொடி பெண்கள் இயக்கம் கண்டியில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, பெருந்தோட்ட துறையில் பெண் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர், இன்று வரையில் அது தீர்க்கப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பாதை ஓரங்களிலும் கற்பாறைகளிலும் மரங்களுக்கு அடியிலும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, காலகாலமாக அவர்கள் இவ்வாறு நடத்தப்படுதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

கொட்டும் மழையில் கூரை ஏதுவும் இன்றி ஒருவரால் சாப்பிட முடியுமா? ஆனால் பெண் தோட்டத் தொழிலாளர்கள் அவ்வாறு சாப்பிடுகின்றனர், சில வேளைகளில் நாய், குரங்கு, காகம் வனஜீவராசிகள் சாப்பாட்டை நாசம் செய்து விட்டு சென்று விடுகின்றன. அதன் போது சாப்பிடாமல் பட்டினியாக இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தண்ணீர் வசதிகள் எந்த மலையிலும் ஏற்படுத்தப்படவில்லை. குடிப்பதற்கும், கைகளை கழுவுவதற்கும் தொழிலாளர்கள் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் 8 மணி நேரத்துக்கு போதுமானதாக இல்லை.

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மலசலகூட வசதிகள் தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் இல்லை என்பது மேலும் ஒரு பிரச்சினையாகும். 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு நீர் வசதியுடன் கூடிய மலசல கூடங்கள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

அவர்கள் மரங்களின் மறைவுகளையும் புதர்களையும் தேடிச் செல்கின்றனர். அவ்வாறான மறைவான இடங்களில் பூச்சிப்பட்டடைகள் தாக்குவதும், வழுக்கி விழுந்து உபாதைகளுக்கு உள்ளாவதும் அன்றாட நிகழ்வாகும். 

மாதவிடாய் காலங்களில் தங்களுடைய உடைகளை மாற்றிக் கொள்ளவோ, அதற்கான தேவைகளை செய்து கொள்ளவோ வாய்ப்பில்லை. மலைகளில் யாரும் பார்த்து விடுவார்களோ என பயந்து பயந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி தொழிலாளர்கள் தங்களது இயற்கை உடல் கழிவுகளை வெளியேற்றுவது என்பது வேலைத்தள உடல் நல பாதுகாப்பு மற்று தொழில் உரிமை மீறலாகும்.

தொழில் அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, தொழில் ஆணையாளர்கள் என தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் அமைதியாக இருந்து விடுகின்றன. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே இழைக்கும் அநீதியாகும். இது இலங்கையின் தொழில் சட்டங்களின் தரம் தொடர்பான கேள்வியை எழுப்பும் நிலையையும் உருவாக்குகின்றது.

அதேபோன்று தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும். பெண் தொழிலாளர்களின் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக அடையாளப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்ட மட்டத்தில் ஏனைய தொழிலாளர்களக்கு இப்பிரச்சினையின் விளைவுகளை தெளிவுப்படுத்துவதோடு, கம்பனிகள் மற்றும் அரச மட்டத்தில் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டும். 

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் செங்கொடி பெண்கள் இயக்கம் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் அநீதியை தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு அறிவூட்டும் வகையிலும் அரசு மற்றும் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் சுவரோவியங்களை தீட்ட ஆரம்பித்துள்ளது.

(அக்குறணை நிருபர்)

No comments:

Post a Comment