இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினத்திற்கான பணம் இனிவரும் காலங்களில் கல்விக்காக செலவிடப்படும் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினத்திற்கான பணம் இனிவரும் காலங்களில் கல்விக்காக செலவிடப்படும் - ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மே தின நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. அதற்காக பல இடங்களில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்களை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதற்காக நாம் பாரிய அளவில் நிதியினை செலவிட்டு வருகிறோம். ஆகவே, இனிவரும் காலங்களில் மே தினத்திற்காக செலவிடும் பணத்தினை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்போவதாக தோட்ட வீடமைப்பு மற்று சமூக உட்கட்டமைப்புகள் வசதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (27) இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை ஊடுகு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எத்தனையோ மே தினங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகின்றது.

அவ்வாறான சூழ்நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியினை தொடர முடியாது உள்ளனர். பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கு வாய்ப்பிருந்தும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் பொருளாதார கஷ்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகவே, அவற்றிக்கு தீர்வு காண வேண்டும். 

ஆகவே, கடந்த காலங்களைப் போல் அல்லாது உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது. அதற்காகத்தான் நீங்கள் எனக்கு அங்கிகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிப்பேன்.

கடந்த காலங்களில் தோட்டத்தில் உள்ள தலைவிகள் காங்கிரஸை மறந்த நிலையே காணப்பட்டது இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது. காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம். 

அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளிர் தினம் நேற்று (27) பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் மற்றும் விவாத போட்டிகளும் இடம்பெற்றன.

இதன்போது வருகை தந்திருந்த இ.தொ.கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு அமைச்சரினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதித் தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதுபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment