சுற்றுலாத்துறையினருக்கான நிவாரணப் பொதி ஆண்டு இறுதி வரை நீடிப்பு, சுகாதாரத் துறை இன்னும் உரிய ஒப்புதல் அளிக்கவில்லை - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

சுற்றுலாத்துறையினருக்கான நிவாரணப் பொதி ஆண்டு இறுதி வரை நீடிப்பு, சுகாதாரத் துறை இன்னும் உரிய ஒப்புதல் அளிக்கவில்லை - அமைச்சர் பிரசன்ன

கொவிட் தொற்று நோய் பாதிப்பு காரணமாக சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் குத்தகை சலுகை வசதிகள் அடங்கிய நிவாரணப் பொதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு அரசாங்கம் கடன் மற்றும் குத்தகை சலுகைகளை வழங்கி வருகிறது. இது இந்த மாதம் 31ஆம் திகதி முடிவடையவுள்ளது.

கடந்த ஜனவரி முதல் நாடு சுற்றுலா பயணிகளுக்கு திறந்திருந்தாலும், சுற்றுலாத் துறை இன்னும் மீளாததால் இந்த சலுகையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இதை இந்த ஆண்டு டிசம்பர் 31வரை நீட்டிக்குமாறும் கூறியுள்ளேன்.

ஜனவரி 21ஆம் திகதி நாடு திறக்கப்பட்டதிலிருந்து, 5,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இலங்கைக்கு அடிக்கடி வருகை தரும் சீனா, இந்தியா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் அந்த நாடுகள் பயண அனுமதியை வழங்கவில்லை. இந்த நிலைமை நாட்டின் சுற்றுலாத் துறையை நேரடியாக பாதித்துள்ளது. 

சுகாதார விதிமுறைகளின்படி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சுகாதார மற்றும் சுற்றுலா அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட சில பிரச்சினைகளுக்கு சுகாதாரத் துறை இன்னும் உரிய ஒப்புதல் அளிக்கவில்லை.

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து அதற்கான அனுமதிகள் விரைவில் பெறப்படும். உலக சுற்றுலா ஊக்குவிப்புக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 59 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து பல சிறப்பு விளம்பரங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை குறிவைத்து மற்றொரு திட்டம் தொடங்கப்படும்.

சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதனை செயல்படுத்த முடியும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment