இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ இணைந்த குழுவுக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரிதல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகில் 130 நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள போது இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமை அரசாங்கத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் இதுவரை எமக்கு 10 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
எம்மை விட முன்னேற்றமடைந்த நாடுகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இன்னும் கூட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. அதுபோன்று 136 நாடுகள் தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.
எனினும் எமது ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களின் நலன்களிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். அதற்கு முதலிடம் வழங்கி செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை 10ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment