கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டு, ஆட்சி மாற்றம் காரணமாகக் கைவிடப்பட்டு விட்ட கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் இந்தக் கோரிக்கையை அவரிடம் விடுத்தார்.
கடந்த சனிக்கிழமை (27-02-2021) யாழ் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து பேரவை உறுப்பினர்களுடன் உரையாடியபோதே அஜித் கப்ராலிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
568 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குரிய காணியை 2013ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேசி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழகத்துக்குப் பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் 1978ஆம் ஆண்டில் பேராசிரியர் துரைராஜா முன்மொழிந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 30 வருட கனவாக இருந்து வந்த பொறியியல் பீடத்தை அமைக்கும் வாய்ப்பு யாழ் பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்ததுடன், 30 வருடங்களுக்கு மேலாக நிரந்தர இடமில்லாமல் சிரமப்பட்டு வந்த விவசாய பீடமும் அறிவியல்நகரில் அமைந்தது.
தற்போது அங்கு புதிதாக தொழில்நுட்பபீடமும் ஆரம்பிக்கப்பட்டு 2500 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். எனினும், அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகமும், அதனைச் சுற்றியுள்ள பிரதேசமும் இன்னமும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்து வருகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டே பல்கலைக்கழகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு அறிவியல் நகர் பல்கலைக்கழக அபிவிருத்தித் திட்டம் வகுக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கு 2300 மில்லியன் ரூபா நிதியுதவியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அறிவியல் நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று பேரவை உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ராலிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இலங்கையின் 25 மாவட்டங்களில் வறுமையில் முதலிடத்தில் கிளிநொச்சி இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் வறுமையைப் போக்கவும் பங்களிக்க முடியும் என்றும் இதன் போது றுஷாங்கன் சுட்டிக் காட்டினார்.
மேலும், அபிவிருத்திக்கான முதலீடுகளின் போது, வறுமையில் முதலிடங்களிலிருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இங்கு கேட்டுக் கொண்ட றுஷாங்கன், அப்போதுதான் உண்மையான சமத்துவம் நிலைநாட்டப்பட்டு எல்லா இடங்களிலும் சமநிலையான அபிவிருத்தி ஏற்படுத்தப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.
கோ.றுஷாங்கன்
No comments:
Post a Comment