"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க..." என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க..." என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்

திருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கும், துன்புறுத்திய பெண்ணுக்கும் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

தெல்கொடை, கந்துபொட பிரதேசத்தில் நிதா பவுன்டேஷன் வீட்டுத் தொகுதியில் (மல்வானைக்கு அருகே) வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட திருஷ்டி நீக்கும் சடங்கு நிலையமொன்றுக்கு கொண்டு வரப்பட்ட 9 வயது சிறுமி, பிரம்பினால் ஈவிரக்கமின்றி அடித்ததனால் சிறுமி நேற்றுமுன்தினம் (27) பிற்பகல் மரணமடைந்தார்.

தெல்கொடை கந்துபொடையைச் சேர்ந்த எட்டு வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (27) பிற்பகல் 1.00 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள நோய் நீக்கும் சடங்கை நடாத்தும் நிலையத்துக்கு இச்சிறுமி தனது தாயாரால் கொண்டுவரப்பட்டுள்ளார். சிறுமிக்கு உள்ள திருஷ்டியை நீக்குவதற்காகவே இங்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்கு சடங்கின்போது இப்பெண் குறித்த சிறுமியை பிரம்பினால் பலமாக அடித்ததனால் சிறுமி மரணமடைந்துள்ளார். பின்னர் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது, குறித்த சிறுமி "அடிக்காதீங்க ஆன்டி.. அடிக்காதீங்க..." என கதறியது தமக்கு கேட்டதாகவும், பிற்பகல் 1.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை இவ்வாறு சிறுமி துன்புறுத்தப்பட்டதாக, அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மீகஹவத்த பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மஹர பதில் நீதவான் வசந்த ராமநாயக்க ஸ்தலத்துக்கு நேற்று (28) வருகை தந்து கள பரிசோதனை நடாத்தியதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இதன்போது குறித்த வீட்டில் உடைந்த நிலையில் 7 பிரம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நோய் நீக்கும் சடங்கை நடாத்திய பெண்ணும், மரணமடைந்த சிறுமியின் தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(மள்வானை விசேட நிருபர் - ஹனபி)

No comments:

Post a Comment