ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேக நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின - கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேக நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின - கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்

(செ.தேன்மொழி)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எனவே சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது.

36.98 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி மோசடி செய்தமை தொடர்பான, வழக்கை விசாரிக்க சட்டமா அதிபரின் கோரிக்கை பிரகாரம், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதான நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில், மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகிய நீதிபதிகளை கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தை பிரதம நீதியரசர் நியமித்திருந்த நிலையில், அந்த ட்ரயல் அட்பார் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

அதற்கமைய கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, ரவி கருணாநாயக்க உட்பட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் அனைவரும், நாட்டில் நிலவிவரும் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

கடந்த வியாழக்கிழமை இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இதன்போது ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad