யாழ்ப்பாணம், நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன், அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார். அவரது கணவர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில், தனது தாய் , சகோதரர்களுடன் குறித்த பெண் வசித்து வருகின்றார்.
குறித்த பெண் நேற்றையதினம் (01) திங்கட்கிழமை தனது 9 மாத குழந்தையை தடி ஒன்றினால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனை அவரது சகோதரன் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து ஊடகவியலாளர்கள் சிலரினால் குறித்த சம்பவம் குறித்து , நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து இன்றைய தினம் காலை குறித்த வீட்டிற்கு நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்களுடன் யாழ்ப்பாண பொலிஸார் சென்று குழந்தையை மீட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை, மணியம்தோட்டத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு விடுத்த தனது வேண்டுகோளுக்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவின் தலையீட்டின் மூலம் குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தனது ட்விற்றர் கணக்கில் இடுகையொன்றை இட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குழந்தையை மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த குழந்தையின் 24 வயதான தாயை கைது செய்துள்ளதாகவும், அவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் தெரிவித்தார்.
குறித்த பெண், குவைத்திற்கு பணிப் பெண்ணாக சென்ற கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
எச்சரிக்கை : காட்சிகள் மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்
No comments:
Post a Comment