அடக்கத்திற்கான வழிகாட்டலை காலம் தாழ்த்துவது தேவையற்ற பிச்சினையை உண்டாக்கும் - தடுப்பூசி ஏற்றும் முறைமையில் சர்வதேச வழிமுறைகளை சுகாதார பிரிவு மீறி செயற்படுகின்றது : விசேட வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

அடக்கத்திற்கான வழிகாட்டலை காலம் தாழ்த்துவது தேவையற்ற பிச்சினையை உண்டாக்கும் - தடுப்பூசி ஏற்றும் முறைமையில் சர்வதேச வழிமுறைகளை சுகாதார பிரிவு மீறி செயற்படுகின்றது : விசேட வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்தும் அது தொடர்பான வழிகாட்டலை இதுவரை வெளியிடாமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற பிச்சினைகள் தலைதூக்குவதற்கு முன்னர் விரைவாக சுகாதார வழிகாட்டலை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் செயலாளரும், வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்து இருந்து வந்தோம். என்றாலும் காலம் கடந்தாலும் தற்போதாவது அடக்கம் செய்ய அனுமதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

இருந்தபோதும் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான சுகாதார வழிகாட்டலை சுகாதார அமைச்சு இன்னும் வெளியிடமால் இருப்பது கவலையளிக்கின்றது. வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும்போது அது தொடர்பான சுகாதார வழிகாட்டலும் வெளிவந்திருக்க வேண்டும். 

அதனால் தொடர்ந்து இதனை தாமதிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய தேவையான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் முறைமையில் சர்வதேச வழிமுறைகளை சுகாதார பிரிவு மீறி செயற்படுகின்றது. கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான முன்னுரிமை முறையில் சுகாதார பிரிவுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்க வேண்டும். 

கொவிட்டில் மரணிக்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற கணிப்பின் அடிப்படையிலேயே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதனை வழங்கி மரண வீதத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

என்றாலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒழுங்கில்லாமலே இடம்பெற்று வருகின்றது. அதனால் தடுப்பூசி ஏற்றும் அதிகமான மத்திய நிலையங்களில் மக்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக போராடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

அதனால் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக இருக்கமால் கொவிட் தடுப்பூசியை மக்கள் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய முறைமை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment