ஐந்து மீன்பிடிக் கப்பல்களுடன் 54 இந்தியர்கள் இலங்கை கடற்படையால் கைது - சுமார் 1,000 கிலோ கிராம் மீன்கள், தடை செய்யப்பட்ட உபகரணங்கள் மீட்பு - மனிதாபிமான முறையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

ஐந்து மீன்பிடிக் கப்பல்களுடன் 54 இந்தியர்கள் இலங்கை கடற்படையால் கைது - சுமார் 1,000 கிலோ கிராம் மீன்கள், தடை செய்யப்பட்ட உபகரணங்கள் மீட்பு - மனிதாபிமான முறையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வேண்டுகோள்

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐந்து இந்திய மீன்பிடி கப்பல்களுடன், 54 இந்திய பிரஜைகளை இலங்கை கடற்படை நேற்று (24) இரவு கைது செய்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு மீன்பிடி சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காக, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடிக் கப்பல்களின் சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து முயன்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.

அதற்கமைய, வடக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், யாழ்ப்பாணம், கோவிலன் பகுதியிலிருந்து 3 கடல் மைல் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 14 இந்தியர்களுடன் பாரிய இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது கைப்பற்றியுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கப்பல் 75 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட உருக்கினால் தயாரிக்கப்பட்ட கப்பல் எனவும், அது 280 குதிரை வலு சக்தி கொண்ட என்ஜினையும் கொண்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் சுமார் 1,030 கிலோ கிராம் நிறை கொண்ட மீன்களையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் மன்னார், பேசாலையிலிருந்து 7 கடல் மைல் தொலைவிலும், இரணைதீவிலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவிலும் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இரண்டு இந்திய மீன்பிடிக் படகுகளை, கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, அதிலிருந்த இந்திய நாட்டவர்கள் 20 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சர்வதேச கடல் எல்லையிலிருந்து 62 கடல் மைல் தொலைவில், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்து, முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து சுமார் 7.5 மற்றும் 8.5 கடல் மைல் தொலைவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட, இரண்டு இந்திய மீன்பிடிக் கப்பல்களையும், மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படை, அதில் பயணித்த 20 இந்திய பிரஜைகளையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடலுக்குள் வெளிநாட்டு மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து, மனித நுகர்வுக்கு தகுதியற்ற சிறிய மீன்களைப் பிடிக்க பயன்படும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீன்களின் இருப்பிற்கும் அப்பகுதியின் இயற்கை கடல் சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை கடற்படை, இது வடக்கில் வாழும் சாதாரண இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத மீன்பிடித்தல் பதிவாகியுள்ள சந்தர்ப்பங்களில் இந்திய அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கும் கடற்படை நடவடிக்கை எடுத்திருந்ததாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடிக் கப்பல்களும் 54 இந்திய நாட்டினரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, இந்நடவடிக்கைகள் யாவும் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெறும் எனவும் கடற்படை அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும், கடல் வளங்களை பாதுகாப்பதற்காகவும், இலங்கை கடற்படை தொடர்ந்தும் இவ்வாறான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என அறிவித்துள்ளது.

இதேவேளை இந்திய மீனவர்கள் விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டிய விடயம் என தாம் வலியுறுத்துவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைது செய்யப்பட்ட மீனவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கொன்சியுலர் மட்டத்திலான உடனடி அணுகுமுறை ஆகியவற்றுக்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 

இம்மீனவர்களுக்கான கொன்சியுலர் சேவைகளை துரிதமாக வழங்குவது குறித்து நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மீன்பிடி தொடர்பான சகல விடயங்களையும் பரந்தளவில் கையாள்வதற்காக இரு தரப்பு பொறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. 

மெய்நிகர் மார்க்கம் ஊடாக கடந்த 2020 டிசம்பர் 30 ஆம் திகதியன்று செயலாளர்கள் மட்டத்திலான கூட்டு செயலணியின் நான்காவது கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment