உயிர்த்த ஞாயிறு அறிக்கையின் இரகசிய தகவல்கள் அடங்கிய ஏனைய 22 தொகுதிகளும் சட்டமா அதிபரிடம் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

உயிர்த்த ஞாயிறு அறிக்கையின் இரகசிய தகவல்கள் அடங்கிய ஏனைய 22 தொகுதிகளும் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் ஏனைய 22 தொகுதிகளும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதன் 65 தொகுதிகள் மாத்திரம் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 22 தொகுதிகள் தற்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சாட்சியங்கள் உள்ளிட்ட விடயங்கள் அதில் காணப்படுவதால், அவை ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்கனவே வழங்கப்படாதிருந்த நிலையில் தற்போது முழு அறிக்கையும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அபூ ஹிந்த், லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ், றிம்சான், சாரா ஜெஸ்மின் ஆகியோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும்.

இந்நிலையில், இன்று கையளிக்கப்பட்ட 22 பாகங்களும் ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அதிக இரகசியமானவை என சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad