உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய மைத்திரி, ரணில் - 12 அடிப்படை மனித உரிமை மீறல் விசாரணை ஜூன் 7, 8, 9 ஆம் திகதிகளில் - பிரதம நீதியரசர் தலைமையில் கூடிய ஆறு நீதியரசர்கள் அடங்கிய குழுவினால் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய மைத்திரி, ரணில் - 12 அடிப்படை மனித உரிமை மீறல் விசாரணை ஜூன் 7, 8, 9 ஆம் திகதிகளில் - பிரதம நீதியரசர் தலைமையில் கூடிய ஆறு நீதியரசர்கள் அடங்கிய குழுவினால் தீர்மானம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூன் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேற்படி மனு மீதான விசாரணை நேற்றையதினம் நடைபெற இருந்த நிலையில் சட்டமா அதிபரின் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த தாவான நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மேற்படி மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

நேற்றையதினம் மேற்படி மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, எல்.வீ.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் இணைந்த 7 நீதிபதிகளைக் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது

எனினும் நேற்றையதினம் குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

நேற்றையதினம் மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான, நீதிமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். 

மேற்படி மனுக்களில் தாம் ஆஜராகும் சில பிரதிவாதிகளுக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிலையில் அவர்கள் சார்பில் தொடர்ந்தும் தாம் ஆஜராக வேண்டுமா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் ஒன்றை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மேற்படி மனு மீதான விசாரணையை ஜூன் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம், மேற்படி தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க குருக்கள் உள்ளிட்ட 12 தரப்பினர் மேற்படி அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் உள்ளிட்ட பலரும் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment