(இராஜதுரை ஹஷான்)
73 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் கறுப்பு நிற ஆடையணிந்து போராட்டங்களில் ஈடுப்பட தீர்மானித்துள்ளமை தவறான செயற்பாடாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கையை பலவீனப்படுத்தும் வகையில் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரித்தானிய காலணித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற தினத்தையே சுதந்திரமாக இலங்கை மக்கள் கொண்டாடுகிறார்கள். காலணித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கு பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள். 73ஆவது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் அனைவரும் இனம், மத மொழி வேறுப்பாடுகளை துறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் கொண்டாட வேண்டும்.
73 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல எதிர்ப்பு போராட்டங்களை தமிழ் அரசியல்வாதிகள் முன்னின்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
சுதந்திர தினத்தன்று கறுப்பு ஆடையணிந்து போராட்டங்களில் ஈடுப்படுவது முற்றிலும் தவறான செயற்பாடாகும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
சாதாரண தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைவதற்கு தமிழ் தலைவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். தற்போதுள்ள அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய நோக்கங்களை செயற்படுத்திக் கொள்ள தேசிய நல்லிணத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடரை அடிப்படையாக கொண்டே இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளின் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஈடுப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment