அரசாங்கத்துக்கெதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதன் பொறுப்பு பொலிஸாருக்குள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி ஏ9 வீதியில் நேற்றுமுன்தினம் 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர், போராட்டம் நடத்தியவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோருபவர்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களென்றும் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடி பொருட்கள் மற்றும் டெடனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கெதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment