சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும், இவ்விடயத்தில் ஆளும், எதிர்தரப்பு என்ற வேறுபாடு கிடையாது - அமைச்சர் காமினி லொகுகே - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும், இவ்விடயத்தில் ஆளும், எதிர்தரப்பு என்ற வேறுபாடு கிடையாது - அமைச்சர் காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை. சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். இவ்விடயத்தில் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்ற வேறுபாடு கிடையாது. அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதத்துக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்தவர்கள் அரச அதிகாரத்தை முறைக்கேடான வகையில் பயன்படுத்தியதன் பயனை தற்போது அனுபவிக்கிறார்கள். முறையான விசாரணைகளுக்கு அமையவே சட்டத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்தரப்பினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட முடியாது.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் நல்லாட்சியில் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டன. ராஜபக்ஷர்கள் என்ற பெயருடன் தொடர்புடையவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பலர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தை கொண்டு அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவா விவகாரத்தை கையாண்டது. இதனால் புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் என பலர் பாதிக்கப்பட்டார்கள். கடந்த அரசாங்கத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவினார். அதனை அடியொட்டியதாகவே அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அரச அதிகாரத்தை கொண்டு எதிர்தரப்பினரை பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. கடந்த அரசாங்கம் செய்த தவறை தற்போதைய அரசாங்கம் தொடராது. அரசியல் பழிவாங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதத்துக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment