(செ.தேன்மொழி)
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறை செயற்பாடுகள், அதனால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார புத்தாக்கம் மற்றும் வருமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எம்முடனான பிரச்சினைகளை நேரடியாக தொடர்புகொண்டு தீர்வு கொள்ளவே முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து மாற்று முயற்சிகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியின் கையில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயம் தொடர்பில் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த ஆணைக்குழுக்கு மூன்று மாதகால அவகாசத்தையும் வழங்கியுள்ளார். அதற்மைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 81 ஆவது சரத்துக்கமைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழுவுக்கு ஒருவரது குடியுரிமையை 7 வருடங்களுக்கு நீக்கி வைப்பதற்கான அனுமதிவுள்ளது. அதனால் வாக்களிப்பது மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை நீக்கவும் முடியும்.
அரசாங்கத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதாரம் தொடர்பான அவர்களது செயற்பாடுகளை நாட்டு மக்களிடம் மறைப்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளை அடக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறை செயற்பாடுகள், அதனால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சிறந்த முதுகெழும்புள்ள தலைவர்கள் என்றால் இவ்வாறு மாற்று முயற்சிகள் மூலம் எம்மீது அடக்குமுறையை மேற்கொள்ளாமல், நேரடியாக கலந்துரையாடி தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment