ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார

(செ.தேன்மொழி)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, நீதிமன்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டியது எதிர்கட்சியின் கடமையாகும்.

இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

அது தொடர்பில் சபாநாயகரிடம் நாம் வினவினால், அதற்கு அவர் தனக்கு இன்னமும் அறிக்கை கிடைக்கப் பெறவில்லை என்றே தெரிவித்து வருகின்றார்.

ஆனால் விசாரணை அறிக்கையிலே, பொறுப்புதாரிகளாக எதிர்தரப்பு அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தினால் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில், அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவொன்று ஆராய்ந்து பார்ப்பது நியாயமானதா? என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் காண்பிக்கும் முயற்சியோ இதுவென்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

எனினும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நாம் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment