(ஆர்.யசி)
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டால் அதனை வழங்க நாம் கட்டுப்படுவோம். ஆனால் ஏனைய கொடுப்பனவுகளில் தளர்வுகள் ஏற்படும். ஆயிரம் ரூபாவையும் கொடுத்து ஏனைய கொடுப்பனவுகளையும் கொடுக்க முடியாது. அதேபோல் எம்மால் இரண்டு சட்டங்களின் கீழ் கட்டுப்படவும் முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அரசாங்கம் எமக்கு அழுத்தங்கள் கொடுக்க முன்னர் அரசாங்கத்தின் நிருவாகத்தின் கீழுள்ள தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாவை கொடுத்தாக வேண்டும். அரசாங்கம் அதனை செய்யாது மாறாக எம்மீது அழுத்தங்களை பிரயோகிப்பது நியாயமானதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்க வேண்டும் என்ற நீண்ட நாட்கள் கோரிக்கைக்கமைய தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன நேற்று கொழும்பில் தொழில் அமைச்சில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனதத்தின் தீர்மானம் குறித்தும் வினவிய போதே பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை இவற்றை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனினும் அதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கவில்லை. எம்மால் இதற்கான இணக்கம் தெரிவிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.
ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை பெற்றுக் கொள்ளும் இலகுவான வழிமுறையை இப்போதே நாம் அவர்களுக்கு கொடுத்துள்ளோம். இப்போதும் தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் கேட்கும் தொகைக்கு அதிகமாகவே சம்பாதிக்கின்றனர். ஆனால் தொழிற்சங்கங்கள் எமது திட்டத்தை விரும்பவில்லை. அவர்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே பேசுகின்றனர். எனவே அதற்கான சில நிபந்தனைகளை எமது சார்பிலும் முன்வைத்துள்ளோம். இப்போது ஆட்சேபனை காலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமாயின் அது நாட்டின் சட்டமாகுமாயின், அதற்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கமைய நாமும் மாற்று வேலைத்திட்டங்களை கையாள்வோம். இப்போது சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட்டு ஒப்பந்தமும் ரத்தாகும். எனவே வேறு மாற்று திட்டங்களில் தோட்டங்களை நாம் நிருவகிக்க வேண்டிவரும். வருமானத்திற்கு அமையவே சம்பளங்களை கொடுக்க முடியும்.
அரசாங்கம் எமக்கு அழுத்தங்கள் கொடுக்க முன்னர் அரசாங்கம் நிருவகிக்கும் தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாவை கொடுத்தாக வேண்டும். அரசாங்கம் அதனை செய்யவில்லை. மாறாக எம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்.
எவ்வாறு இருப்பினும் குறைந்தபட்ச சம்பளத்தை மட்டுமே சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்க முடியும். ஏனைய எந்த கொடுப்பனவுகளையும் வழங்குமாறு அவர்களால் வலியுறுத்த முடியாது. எனவே அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டால் அத்துடன் ஏனைய கொடுப்பனவுகளில் தளர்வுகள் ஏற்படும். எம்மால் இரண்டு சட்டங்களை கையாள முடியாது. எனவே இதுவே எமது இறுதித் தீர்மானம் என்றார்.

No comments:
Post a Comment