உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக சமர்ப்பிக்கப்படும் : ரமேஷ் பத்திரண - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக சமர்ப்பிக்கப்படும் : ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார். 

இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சிரேஷ்ட நீதித்துறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் பல பரிந்துரைகளும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய நிறுவனங்கள் பல உள்ளன. நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பன அதில் உள்ளடங்குகின்றன.

எதிர்காலத்தில் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு கிடைத்தவுடன் அது தொடர்பில் ஆராய்ந்து நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்தியதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைப்பதற்காக மாத்திரமே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

எனவே எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி குறித்த அறிக்கையை அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்க சுயாதீனமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad