(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் தலையீடு அநாவசியமானது. அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தையும், தேசிய வளங்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படவில்லை. ஆட்சிக்கு வரும் முன் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது. பிற நாடுகளின் அதிகார போட்டின்னத்மைக்கு இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தையும் தேசிய வளங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.
நாட்டில் உள்ள தேசிய வளங்களை இலங்கை மக்கள் மாத்திரமே உரிமை கொண்டாட முடியும். தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். 10 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தினால் அரசாங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை என்றார்.
No comments:
Post a Comment