இலங்கை ஈஸ்டர் தாக்குதல் : பின்னணியில் இந்தியா உள்ளதா? புதிய தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் : பின்னணியில் இந்தியா உள்ளதா? புதிய தகவல்கள்

தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார்.

அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த நிலையில், கடந்த 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதன் ஒத்துழைப்பு வழங்கியவர்களை சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தார்.

அத்துடன், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

''நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்தியுள்ள ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், மத்திய வங்கி ஊழல் போன்ற குற்றங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்" என ஜனாதிபதி கூறியிருந்தார்.

உண்மையிலேயே ஈஸ்டர் தாக்குதலின் பொறுப்பாளர் அல்லது பொறுப்பாளர்கள் யார்? அதற்கு உதவிகளை வழங்கியது யார்?

''பயங்கரவாத குழுவொன்றின் தலைவர் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்"

267 உயிர்களை காவு கொண்ட மற்றும் சுமார் 500 வரையானோர் காயங்களுக்கு உள்ளான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் சந்தேகநபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய மொஹமட் சஹ்ரான் ஹசிமே, இந்த தாக்குதலை திட்டமிட்டவர் அல்லது தலைவர் என பலராலும் அறியப்பட்டாலும், இந்த தாக்குதலை வழிநடத்தியது அவர் கிடையாது என விசாரணைகளை நடத்திய இரகசிய விசாரணையாளர்களின் எண்ணமாக காணப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இறுதி தினங்களில் சாட்சி வழங்கிய, தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, இந்த தாக்குதலுக்கு பின்னால் கண்ணுக்கு புலப்படாதவர்கள் உள்ளார்கள் என தான் சந்தேகிப்பதாக கூறியிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதானி, சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் ரவி சேனவிரத்ன, ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியங்கள் குறித்து, விசாரணைகளை நடத்திய போதே, ஷானி அபேசேகர இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கடமையாற்றியிருந்ததுடன், இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட போலீஸ் விசாரணைகளின் பொறுப்பாளராகவும் இவரே செயற்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டது சஹ்ரான் ஹஷிமாக இருக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முதல் தடவையாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் ரவி சேனவிரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக வழிநடத்திய நபரை கண்டறிய வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையென்றால், அந்த குழுவை தேடி கண்டுபிடிக்கும் வரை, விசாரணைகள் முழுமை பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பதில் வழங்கியிருந்தார்.

இந்த சம்பவத்தில் நிறைய கேள்விகள் காணப்படுகின்றன. முதலாவது கேள்வி, உலகிலுள்ள எந்தவொரு பயங்கரவாத குழுவின் தலைவரும், தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழப்பதில்லை. தமது குழுவின் உறுப்பினர்களை தற்கொலை செய்து கொள்வதற்காக வழிநடத்தல்களையே தலைவர் செய்வார் என அவர் கூறியுள்ளார்.

தலைவரை பின் தொடர்வோரே தற்கொலை குண்டுத்தாரர்களாக செயற்படுவார்கள். சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாரராக செயற்பட்டு, உயிரிழந்தமை எமக்கு கேள்வியாக உள்ளது. அதனால் வேறு கண்ணுக்கு புலப்படாதவர்கள் இருக்கின்றார்களா, அல்லது வேறொரு தரப்பு சஹரானை வழிநடத்தியதா என்பது குறித்து எனக்கும் கேள்வி உள்ளது என சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

''இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பது இந்தியாவா"

இந்த ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முன்பதாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.

''இந்த தாக்குதலுக்கு பின்னால் இந்தியா இருக்கின்றது என எனக்கு தோன்றுகின்றது" என இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கீழ் குறிப்பிடப்படுகின்ற பல சாட்சியங்களை முன்னிலைப்படுத்தியே, டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

01. தற்கொலை குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்படக்கூடும் என இந்திய புலனாய்வு துறையினர் முதல் முறையாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அறிவித்துள்ளனர்.

02. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும், இந்த தாக்குதலில் இலக்காக காணப்படுகின்றது என புலனாய்வு தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

03. இந்த சந்தர்ப்பத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அதிக பாதுகாப்பு வழங்குமாறு இந்தியா கோரியதா, அவ்வாறு இல்லையென்றால், பாதுகாப்பு வழங்கியது ஏன் என நாடாளுமன்ற தெரிவுக்குழு, பொறுப்பான அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் ''இல்லை" என பதிலளித்துள்ளனர்.

04. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்திய பாதுகாப்பு செயலாளர், இலங்கைக்கு ஒரு நாள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

05. இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பாதுகாப்பு செயலாளருக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

06. கட்டுவாபிட்டிய கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவியான ''சாரா" என அழைக்கப்படும் புலஷ்தினி, தாக்குதலின் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றமையானது, ஒரு புதிராகவே உள்ளது.

07. அவரை இலங்கைக்கு கொண்டு வந்து, விசாரணைகளை நடத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டாமை என்பதுடன், இந்தியா அவரை இலங்கையிடம் ஒப்படைக்க தயார் இல்லை என தெரிய வருகின்றது.

08. ''சாரா"விடம் போலீஸார் இதுவரை விசாரணைகளை நடத்தவில்லை என்பதுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவும் அதற்கான ஆர்வத்தை காட்டவில்லை.

09. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்காக திட்டம் காணப்பட்டதாக நாமல் குமார என்ற நபர் வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பிலான விசாரணைகள், இடைநடுவில் நின்றமையும் சந்தேகத்தை எழுப்புகின்றது.

10. இந்த கொலை முயற்சியை மேற்கொண்ட நபர், இந்திய பிரஜை என்பதுடன், அவருக்கு மனநிலை சரியில்லை என கூறி, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

11. நாமல் குமார என்பவரின் மேல் குறிப்பிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரான் ஹஷிம்மை கைது செய்ய போலீஸ் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணைகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

''இவ்வாறான பாரிய தாக்குதலுக்கு பின்னால், முழுமையான இராணுவ தொழில்நுட்பம், சிறந்த புலனாய்வு வலையமைப்பு மாத்திரமன்றி, சிறந்த அனுபவம் உள்ள குழுவொன்று இருக்க வேண்டும். சஹரானுக்கு அவ்வாறான வலையமைப்பொன்று இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது" என அவர் கூறியுள்ளார்.

''அதேபோன்று, சஹரானுக்கு ஆயுத கிடங்கு இருந்து, கண்டுபிடிக்கப்பட்டமைக்கான எந்தவொரு தகவல்களும் கிடையாது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பதில்

சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

''போலீஸாரினால் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளன" 32 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான சாட்சியங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன" என பதிலளித்துள்ளார்.

அதேபோன்று, 241 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுப்பு காவல் மற்றும் விளக்கமறியலில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் புலனாய்வு துறையுடன் இணைந்து சில சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ''சாரா" குறித்து நேரடி பதிலொன்றை வழங்கவில்லை.

''ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்பில்லை"

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கும், ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்பு கிடையாது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் ரவி சேனவிரத்ன, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

அதேபோன்று, ஐ.எஸ் அமைப்பிற்கும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்புள்ளமை குறித்து எந்தவொரு விசாரணைகளிலும் உறுதியாகவில்லை என டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும், சவுதி அரேபியா, லெபனான் அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கும் சென்றமை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என என அவர் குறிப்பிட்டுள்ளார்.

''வெளிநாட்டிற்கு சென்றிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இந்தியாவிற்கு மாத்திரமே சென்றுள்ளார்கள்" எனவும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கிய, சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும், இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

''தாக்குதலின் பின்னர் ட்ரோபிகல் உணவகத்தை தவிர, ஏனைய 6 இடங்கள் மற்றும் சாய்ந்தமருது வெடிப்பு சம்பவம் தொடர்பில் நானே விசாரணைகளை நடத்தினேன். எந்தவொரு விசாரணைகளிலும் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஐ.எஸ் அமைப்பு உள்ளமை உறுதியாகவில்லை" என அவர் கூறியுள்ளார்.

மூன்று விசாரணைகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முதலில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு எந்தவொரு புலனாய்வு தகவல்களும் கிடைக்கவில்லை என ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக கூறி வந்த மைத்திரிபால சிறிசேன, அதற்கான பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அப்போதைய போலீஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரே, இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என, மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக கூறி வந்திருந்தார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர், மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட அதேவேளை, அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

''ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை என்னிடம் கிடைத்துள்ளது. அதிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன" என சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தன்னை பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு கூட கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்காத போதிலும், இதற்கான முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொள்ள தான் தயார் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

''மைத்திரி அறியாது இருந்ததை நம்ப முடியாது"

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான முன்னறுவித்தல் குறித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறியாதிருந்ததாக, தன்னால் நம்ப முடியாது என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு, புலனாய்வு தகவல்களை அறிவிக்கவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியங்கள் குறித்து விசாரணை நடத்திய போதே ஷானி அபேசேகர இதனைக் கூறியுள்ளார்.

''அரச பாதுகாப்பு, அரசியல், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் போன்ற அனைத்து விடயங்களையும், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், நாளாந்தம் ஜனாதிபதிக்கு தெளிவூட்டுவார் என்பதனை நான் நன்கறிவேன். ஆரம்ப தகவலே ஜனாதிபதிக்கு வழங்கப்படும். அரச புலனாய்வு துறையின் ஊடாகவே, நாட்டிலுள்ள அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி அறிந்து கொள்வார். அதனால், ஜனாதிபதி இந்த விடயம் குறித்து அறியாதிருக்க முடியாது" என ஷானி அபேசேகர, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார்.

''தாக்குதலின் பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க வேண்டாம் என எம்மிடம் கூறுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு, ஜனாதிபதி எம்மை அழைத்தார். தனக்கு அறிவிக்கப்படவில்லை என்பதனை ஜனாதிபதி அப்போது கூறினார். எனினும், ஏன் என்னிடம் கூறவில்லை என ஜனாதிபதி நிலந்தவிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கேள்வி எழுப்பவில்லை" என அவர் சாட்சி வழங்கியுள்ளார்.

வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து வெடிப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில், இரண்டு சந்தேகநபர்கள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர். அது உங்களதும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் ரவி சேனவிரத்னவினதும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என ஆணைக்குழுவின் தலைவர், ஷானி அபேசேகரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் என ஷானி அபேசேகர பதிலளித்திருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நடந்த கூட்டமொன்றில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, இந்த இரண்டு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும், விசாரணைகள் நிறைவடையும் வரை விடுவிக்க முடியாது எனவும் தான் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

''அதன் பின்னர், பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க இந்த விசாரணைகளை நடத்தி, குறித்த இருவரும் வண்ணாத்திவில்லு வெடி பொருள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு கிடையாது என அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையிலேயே, உரிய நடைமுறைகளின் பிரகாரம், பிரதி போலீஸ் மாஅதிபரும், தானும் அவர்களை விடுதலை செய்ய அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஆசீர்வாதம்

நடத்தப்படவுள்ள தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், முழுமையான தாக்குதல் குறித்து, விரிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இலங்கை அதிகாரிகளுக்கு கிடைத்தமை தொடர்பில் தெரிவுக்குழு விசாரணைகளில் உறுதியாகவில்லை என டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் இந்தியாவின் தலையீட்டினாலேயே தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீன சார்பு கொள்கையுடன் செயற்பட்டமையினாலேயே, இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம் என பல அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், அதன் பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் கீழ், தமது தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாது என புரிந்துகொண்ட இந்தியா, பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களின் மனங்களை வெற்றி கொண்ட தலைவர் ஒருவரை ஆட்சிக்கு அமர்த்தி, அவர் ஊடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தீர்மானித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவூட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு, அமெரிக்காவின் முழுமையான அனுசரணை மற்றும் ஆசீர்வாதம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment