பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேசத் தடை - சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை என்கிறார் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேசத் தடை - சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை என்கிறார் சரத் வீரசேகர

பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயரிய பாராளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பொன்று தொடர்பில் உயரிய பாராளுமன்றத்தில் புகழ்ந்து பேசுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் பாராளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது. அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. அதனால், இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தெரிவித்தார்.

அவ்வாறு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால், பாராளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment

Post Bottom Ad