ஜனாஸா அடக்கம் தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

ஜனாஸா அடக்கம் தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களையும் அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்ட காலமாக இழுத்தடித்து விட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது விட்டிருந்தால், அவ்வாறே உறுப்பு நாடுகள் சிலவற்றால் இலங்கைமீது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சேர்க்கப்படாது விட்டிருந்தால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட, மக்களின் ஒரு சாராரை மனவேதனைக்குள்ளாக்கிய இத்தகைய எரியூட்டும் அவலத்துக்குத் தீர்வு கிட்டியிருக்க மாட்டாது.

அமர்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குரல் எழுப்பியதன் பயனாகவும், அநேகமான மேற்குலக நாடுகள் கருத்துப் பறிமாற்றங்கள் நடத்தி கண்டன எதிர்பலைகளைத் தோற்றுவித்ததன் விளைவாகவும் பெப்ரவரி 25 ஆந்திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியது.

தனிப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றினதும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கின்ற விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் எங்கள் நாடும் ஓர் அங்கம் என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை முன்வைக்கப்படும் அறிக்கைகள் மீது கரிசனை செலுத்தி அவற்றை அணுக வேண்டும்.

நாங்கள் சந்தித்த எமது தலைநகரிலிருந்து இராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களும் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் சர்வதேசப் பிரமுகர்கள் பலரும் எங்களது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்டதோடு, ஒத்துழைப்பு நல்குவதாக உறுதிமொழியும் அளித்திருந்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இந்த விடயத்தில் எங்களது இழந்த உரிமையை மீளப் பெறுவதற்கு உதவிய பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏராளமான சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்பன தனியாகவும் கூட்டாகவும் இதற்காகக் குரல் கொடுத்ததை நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றோம்.

இந்த விவகாரத்தில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்துச்செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் போன்றவற்றின் அழுத்தம் கடந்த சில மாதங்களாக சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு வந்தது.

காணாமல் போனோரின் குடும்பத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றமையால், ஜனாதிபதியின் குடும்பத்தினரைக் கண்டு கதைப்பதற்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அவர்களின் துன்பியல் வாழ்வில் அது ஒரு சிறிய முன்னெடுப்பு மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment