மைத்திரிபால குற்றவாளியாக்கப்பட்டு ரணில் பாதுகாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடுவது தவறு : அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

மைத்திரிபால குற்றவாளியாக்கப்பட்டு ரணில் பாதுகாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடுவது தவறு : அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடுவது தவறு. முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. எனவே அவரே முதலில் பொறுப்புக்கூற வேண்டும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் எத்தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை. அரச அதிகாரத்தை நாட்டு தலைவர் உட்பட தேசிய புலனாய்வு அதிகாரிகள் முறைக்கேடான விதத்தில் பயன்படுத்தியதன் காரணமாகவே அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். 

முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு தேசிய பாதுகாப்பு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி எந்நிலையிலும் பொறுப்பு கூற வேண்டும். தேசிய பாதுகாப்பை எக்காரணிகளுக்காகவும் கைமாற்ற முடியாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை அனைத்து தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விசாரணை அறிக்கையில் எவ்வித அரசியல் தலையீடும் காணப்படவில்லை. சுயாதீனமாகவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அறிக்கை தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் அறிக்கையில் ஏதும் மறைக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பி னை கருத்திற் கொண்டு தேவையான விடயங்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அறிக்கையில் ஒரு சில விடயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையில் உள்ளன. அவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment